கரூர், பிப். 20: கரூர் மாவட்டம் புகழூர் நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புகழூர் வட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நாணப்பரப்பு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் 20.02.2026 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச்சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 07.03.2026 சனிக்கிழமை அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
