மேலும் ஒரு இந்து தொழிலாளி அடித்துக்கொலை வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எச்சரிக்கை: நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம்

புதுடெல்லி: மேலும் ஒரு இந்து தொழிலாளி அடித்துக்கொல்லப்பட்டதை தொடர்ந்து வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை புறக்கணிக்கவோ, அலட்சியப்படுத்தவோது முடியாது என்று இந்தியா எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு பின்னர் கலவரமாக மாறியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஹசினாவுக்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.

இதனிடையே மைமென்சிங் மாவட்டத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இந்து தொழிலாளி திபு சந்திர தாஸ் போராட்டக்காரர்களால் அடித்து கொல்லப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திபு இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்தை கூறியதால் அவர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாக ராஜ்பாரி அருகே உள்ள கிராமத்தில் குற்றக் கும்பலை உருவாக்கி, பணம் பறித்தல் மற்றும் பிற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்து இளைஞர் அம்ரித் மண்டல் என்பவர் கொடூரமாக கிராம மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு இடைக்கால அரசு இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இது ஒரு மதவாத தாக்குதல் அல்ல என்றும் உறுதிப்படுத்தி உள்ளது. சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் தொடர்ந்து அரங்கேறிவரும் வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக கூறியதாவது: வங்கதேசத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாஸ் சமீபத்தில் கொல்லப்பட்டதை இந்தியா கண்டிக்கிறது.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பவுத்தர்கள் உட்பட வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான பகைமை ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயமாகும். சமீபத்தில் மேலும் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த குற்றங்களை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறை தொடர்பாக வங்கதேசம் சார்பில் முன்வைக்கப்படும் தவறான கதையாடலை நாங்கள் நிராகரித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு நிலைமையும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் வங்கதேச அரசாங்கத்தின் பொறுப்பாகும். விஷயங்கள் வேறு திசையில் செல்வதாக ஒரு கதையாடலை சித்தரிப்பது முற்றிலும் தவறானது, அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.

வங்கதேசத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. வங்கதேச மக்களுடனான நமது உறவுகளை வலுப்படுத்துவதை இந்தியா ஆதரிக்கிறது. வங்கதேசத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் விரும்புகிறோம். வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தேர்தல்களை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சியின் பின்னணியில் இது பார்க்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதற்கிடையே வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா, மேற்குவங்கம், பீகார், உபி, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

* டாக்காவில் மறியல் போராட்டம்
வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதுக்கு நீதி கோரி டாக்காவில் நேற்று அவரது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தொழுகை முடிந்த பிறகு இன்கிலாப் மஞ்ச் மற்றும் ஜூலை மஞ்ச் அமைப்புக்களின் தலைவர்கள், ஆதரவாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து டாக்கா பல்கலைக்கழக மத்திய மசூதியில் இருந்து ஊர்வலமாக ஷாபாக் நோக்கி சென்றனர்.

அங்கு அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்தனர். அங்குள்ள முக்கிய சாலை என்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. கொலைக்கு நீதி கிடைக்கும்வரை முற்றுகை போராட்டம் தொடரும் என்றும் தேவைப்பட்டால் அங்கேயே இரவு முழுக்க தங்கி இருப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

* சிறுபான்மையினருக்கு எதிராக 2900 வன்முறை சம்பவங்கள்
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,’இடைக்கால அரசின் பதவிக்காலத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2900க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆதாரங்கள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று புறக்கணிக்கவோ அல்லது அரசியல் வன்முறை என்று தள்ளிவிடவோ முடியாது’ என்றார்.

* 17 ஆண்டுக்கு பின் தந்தை கல்லறையில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் கடந்த 2008ம் ஆண்டு தாரிக் ரஹ்மான் இங்கிலாந்து சென்றார். அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் தாரிக் 17 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் வங்கதேசம் திரும்பினார். தொடர்ந்து அவர் டாக்காவில் உள்ள தனது தந்தை மற்றும் வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறையை பார்வையிட்டார். குண்டு துளைக்காத பேருந்தில் சென்ற அவர் தந்தையின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தார்.

* வங்கதேச துணை தூதரகம் அருகே போராட்டம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்தும் அங்குள்ள இந்துக்களுக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையிலும் மேற்கு வங்கத்தில் இந்து அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் வங்கதேச துணை தூதரக அலுவலகத்தை நோக்கி இந்து சன்ஹதி என்ற அமைப்பு பேரணியாக சென்று போராடினர்.

* வங்கதேச பயணிகளுக்கு தடை
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வங்கதேச சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

Related Stories: