இனிமேல் 40 சதவீதம் கூடுதல் பிஎஸ்எப் கான்ஸ்டபிள் பதவி அக்னிவீரர்களுக்கு 50% இடம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணி நியமனத்தில் முன்னாள் அக்னிவீரர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய உள்துறை அமைச்சகம் 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2022 ஜூன் மாதம் முப்படைகளின் வயது வரம்பைக் குறைக்கும் நோக்குடன் அரசாங்கம் அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், 17½ ​​வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் அக்னிவீரர்களாக 4 ஆண்டுகளுக்குப் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்களில் 25 சதவீதம் பேரை மேலும் 15 ஆண்டுகளுக்குப் பணியில் தக்கவைத்துக்கொள்ளவும், மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியிலிருந்து வெளியேறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி போன்ற 11 லட்சம் வீரர்களைக் கொண்ட ஒன்றிய ஆயுதக் காவல் படைகளில் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான எதிர்கால நியமனங்கள் அனைத்திலும், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடங்களை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் பிஎஸ்எப் ஆட்சேர்ப்பு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஆட்தேர்வில் 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை அக்னி வீரர்களுக்கு இடம் அளிக்க உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வு மூலம் அக்னிவீரர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பத்து சதவீதம் ஒதுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: