பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்: உறவினர்களிடம் கையும் களவுமாக சிக்கியதால் நடவடிக்கை

சென்னை: பெண் நிர்வாகியுடன் உல்லாசமாக இருந்த தவெக மாவட்ட செயலாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் செந்தில்நாதன் (47). இவர் கடந்த 18ம் தேதி ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் நடந்த விஜயின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நள்ளிரவில் திருச்செங்கோடு திரும்பியுள்ளார். வரும் வழியில் கூட்டப்பள்ளியில் உள்ள தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி வீட்டின் அருகில் உள்ள தெருவில் காரை நிறுத்தி விட்டு, நிர்வாகியின் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார். நள்ளிரவில் காரில் வந்து இறங்கி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டியுள்ளார் செந்தில்நாதன்.

இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பெண் நிர்வாகி வீட்டின் உறவினர்கள், சென்று வீட்டின் கதவை தட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் கதவை திறந்துள்ளார். உடனே உறவினர்கள் உள்ளே புகுந்து அரைகுறை ஆடையில் தப்பிக்க முயன்ற செந்தில்நாதனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். விசாரணையில், அந்த பெண்ணுடன் தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அடுத்தநாள் காலையில்தான் செந்தில்நாதனை அந்த பெண்ணின் உறவினர்கள் விடுத்துள்ளனர். அவரை திருச்செங்கோடு கட்சி நிர்வாகிகள் வந்து, போலீசில் புகார் கொடுத்தால் கட்சியின் மானமே போய்விடும் என்று கெஞ்சி புகார் கொடுக்காமல் சமாதானம் பேசி அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, நிர்வாகியைப் கையும் களவுமாக பிடித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், அந்த பெண்ணும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வீட்டில் தவறு நடப்பதற்கு முன்னதாக மாவட்டச் செயலாளர் சிக்கிக் கொண்டார். இப்போது அவரைப் பற்றி விஜய், புஸ்சி ஆனந்த் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.

ஆனால் அந்தப் பெண்ணையும், மாவட்டச் செயலாளரையும் உறவினர்கள் எச்சரிப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததால் தவெக பொது செயலாளர் என்.ஆனந்த் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: