சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்தி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (25). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டின் அருகே அவர் இருந்தபோது சாத்தான்குளம் தச்சமொழி மது பாரில் வேலை செய்து வரும் சுந்தர் (45) என்பவர் வந்து பாரில் காலி பாட்டிலுக்கு ரூ.10க்கு பதில் ரூ.5 கொடுத்ததாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக கண்டித்ததாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாய் தகராறு ஆனது. உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பினர். பின்னர் சுந்தர், அவருடன் பாரில் பணிபுரியும் நாசரேத் ஜெகதீஷ் (42) ஆகியோர் நேற்று பகல் 11 மணியளவில் மீண்டும் பைக்கில் வந்து, அரசரடி மாரியம்மன் கோயில் அருகே உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சுடலைமுத்துவிடம் சாதி பெயரை கூறி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தர் மற்றும் ஜெகதீஷ் இருவரும் அரிவாளை எடுத்து சுடலைமுத்துவை அரிவாளால் வெட்டினர். தடுக்க முயன்ற உறவினர்களை அரிவாளை காட்டி விரட்டினர். தப்பியோட முயன்ற சுடலைமுத்துவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சுடலைமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிந்து சுந்தர், ஜெகதீஷ் இருவரையும் கைது செய்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
