டெல்லியில் கடும் பனிமூட்டம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு: 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கம்

சென்னை: டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒன்றரை மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லியில் இருந்து, சென்னைக்கு வரும் விமானங்கள் நேற்று தாமதமாக வந்து சேர்ந்தன. அந்த விமானங்கள், சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றன.

நேற்று அதிகாலையில் இருந்து, மதியம் வரை, டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் 4 விமானங்கள், சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள், சுமார் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. விமானங்கள் தாமதம் குறித்து முறையாக அறிவிப்புகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: