கெங்கவல்லி, டிச. 15: ஆத்தூர் அடுத்த புதுப்பேட்டை உழவர் சந்தை அருகில், குழந்தைவேல்(52) என்பவர், இரும்பு கடை மற்றும் பழைய பொருட்களை சேமித்து வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அப்பகுதியில் வாராந்திர சந்தை கூடியது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, குழந்தைவேல் பழைய இரும்பு கடையில் திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனால் புகை வெளியேறி மேகமூட்டம் போல் அப்பகுதியை சூழ்ந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரும்பு கடையின் அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
