மாவட்டத்தில் 69,714 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு

சேலம், டிச. 15: சேலம் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 69,714 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு தன்னார்வலர்கள் மூலம் 2,463 மையங்களில் நடந்தது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், கடந்த 2022ம் ஆண்டு ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்‌’ அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பள்ளி செல்லாத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களை கொண்டு, வரும் 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம், இத்திட்டத்தின் கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு 2025-2026ம் கல்வியாண்டில், 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க, ரூ.25.80 கோடியை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநரகம் ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து, முதல் கட்டமாக 5,37,876 கற்போர்களுக்கு, கடந்த ஆண்டு நவம்பர் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 15ம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக 9.63 லட்சம் பேருக்கு, நேற்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடந்தது. சேலம் மாவட்டத்தில் 2,463 மையங்களில் 69,714 பேருக்கு நேற்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. இதில், சேலம் நகர்ப்புற ஒன்றியத்தில் மட்டும் 72 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சேலம் நகர்ப்புற ஒன்றியம், வையாபுரி தெரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், வட்டார கல்வி அலுவலர் சந்திரிகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்கத் தெரியாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்த வரை, நடப்பு 2025-26ம் ஆண்டில் 2ம் கட்டமாக 16,906 ஆண்கள், 52,849 பெண்கள் என 69,755 பேர் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக கண்டறியப்பட்டனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 2,463 மையங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை எழுத்தறிவு கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் திட்டச் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேர கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், கடந்த ஜூலை மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு, நேற்று (14ம் தேதி) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை எழுத்தறிவு மையமாக செயல்படும் பள்ளிகளில் நடந்தது. இதில் 69,714 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். இதற்கான ஏற்பாடுகளை, எழுத்தறிவு மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர், பள்ளி உதவி ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். இன்று (15ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். தொடர்ந்து மாவட்ட அளவில் மதிப்பெண் பட்டியல் தொகுக்கப்பட்டு, 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன் பின்னர், கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: