பாமகவில் விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்: வக்கீல் பேசிய ஆடியோ வைரல்

திண்டிவனம்: பாமகவில் அதிகார மோதல் ஏற்பட்டு, ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இரு அணியும் தலைவர் பதவி கேட்டும், மாம்பழம் சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தது. இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘பாமகவில் தற்போது யாரும் தலைவர் கிடையாது. இருவரும் உரிமை கோருவதால் சிவில் நீதிமன்றத்துக்கு சென்று தீர்வு காணலாம்’ என கூறியது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி அன்புமணி தரப்பு சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பினர் சார்பில் அன்புமணி மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதில், கடந்த 4.12.25 டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அன்புமணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தலைவர் பொறுப்பில் நீடிக்க இயலாது என நீதிமன்றம் சொல்லியுள்ளது. பாமகவுக்கு உரிமை கோர நிறுவனர் தலைவருக்கு மட்டுமே அனுமதி, அதிகாரம் உள்ளது.

இந்நிலையில் பாமகவில் உறுப்பினரே அல்லாத, எந்த ஒட்டும் உறவும் இல்லாத, எந்த பொறுப்பிலும் இல்லாத, பொறுப்பற்ற நபரான அன்புமணி அதிகார துஷ்பிரயோகத்தில் அவருக்கே தெரிந்த திருட்டுத்தனத்தில் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல், கட்சிக்காரர்களையும் ஏமாற்றும் நோக்கத்தில் தானாகவே தன்னுடைய வீட்டில் தலைமை அலுவலகம் என்று சொல்லிக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் நிற்க விருப்ப மனு வாங்கி பணத்தை மோசடி செய்து வருகிறார். இத்தகைய தகவல் அனைத்து ஊடகத்திலும் வந்துள்ளது.

இது உண்மைக்கு முரணானது மட்டுமல்ல சட்ட விரோதமான செயல். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர் பாமக பெயரில் விருப்ப மனு வாங்கக்கூடாது. இது சம்பந்தமாக குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டி தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அருள் பேசியுள்ளார்.

Related Stories: