தமிழக தேர்தல்களில் 8 சின்னங்களில் களமிறங்கியுள்ள விசிக

ஒரு அரசியல் கட்சியானது மக்கள் சேவையை ஆளுமையுடன் மேற்கொள்ள அரசு அதிகாரம் தேவைப்படுகிறது. இதற்காகவே ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வர ஆசைப்படுகின்றன. இதற்கு அக்கட்சிக்கு தேர்தல் சின்னம் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்குமிக்க ஆளுமைகள் இருந்தாலும் அவர்களின் பிரதான அரசியல் பயணத்தின் வெற்றிக்கு சின்னமும் முக்கிய பங்கு வகித்தன என்றால் மிகையாகாது.
இதனால் ஒரு சின்னத்தில் இருந்து மற்றொரு சின்னத்தில் போட்டியிட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயக்கத்தைேய காட்டி வருகின்றன.

நிரந்தரமாக தங்களுக்கென ஒரு சின்னம் வேண்டும் என்பதே ஒவ்வொரு கட்சியும் விருப்பமாகவும் உள்ளது. இதற்காகவே இந்திய தேர்தல் ஆணையத்தை அரசியல் கட்சிகள், தங்களது கட்சி விதிகளுடன் நாடுகின்றன. ஆனால் தமிழக தேர்தல் களத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக வாக்கு வங்கிகளை கொண்ட விசிக இதுவரையிலான தேர்தல்களில் 8 சின்னங்களில் களத்தை சந்தித்து, வெற்றி தோல்விகளை கடந்து புதிய வரலாற்றை எழுதியுள்ளது என்றால் மிகையாகாது.

1989ல் தலித் பாந்தர் அமைப்பின் அமைப்பாளராக இருந்த திருமாவளவன், 1991ல் இந்த அமைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி என பெயர்மாற்றம் செய்து தனது அரசியல் களப்பணியை தொடங்கினார். இருப்பினும் தேர்தல் களத்தை தவிர்த்துவந்த திருமாவளவன் 1999 நாடாளுமன்ற தேர்தலில் மூப்பனாரின் அழைப்பை ஏற்று தமாகாவுடன் கூட்டணி வைத்து முதன்முதலாக தேர்தல் களத்திற்கு வந்தார். அப்போது சைக்கிள் சின்னத்தில் 2 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தற்போது சிதம்பரம் தொகுதி எம்பியாக உள்ள இவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்தாலும், முதன்முதலில் மக்கள் பிரதிநிதியாக அவர் கால்பதித்தது தமிழக சட்டபேரவையில்தான். 2001 பொதுத்தேர்தலில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவான இவர் சட்டசபைக்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தார்.2001 மே 19ம்தேதி எம்எல்ஏவாக பதவியேற்ற திருமாவளவன் 2004ம் ஆண்டு பிப்ரவரி 3ம்தேதி தனது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், சட்டசபையில் பேச தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

பின்னர் 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் அம்பு சின்னத்தில் 8 இடங்களில் அக்கட்சி போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தது. அதன்பிறகு 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 9 இடங்களில் மணி சின்னத்தில் களமிறங்கிய நிலையில் மங்களூர் (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி) 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அப்போது மங்களூரில் விசிகவில் போட்டியிட்ட செல்வப்பெருந்தகை எம்எல்ஏ ஆனார்.

2006ல் அதிமுக கூட்டணியில் மணி சின்னம், 2009ல் திமுக கூட்டணியில் நட்சத்திரம், 2011ல் மெழுகுவர்த்தி, 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோதிரம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சின்னத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது, கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் நிரந்தர சின்னமான பானை சின்னத்தை அக்கட்சி பெற்றுள்ளது. இதுவரையிலான தேர்தல்களில் விசிக 8 சின்னங்களில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: