9 வயது சிறுமிக்கு அதி நவீன செயற்கை கால் பொருத்தம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

வேலூர், பிப்.19: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 9 வயது சிறுமிக்கு அதி நவீன செயற்கை கால் பொருத்தப்பட்டது. இதில், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செய்யப்பட்டது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 9 வயது சிறுமி ஷாலினிக்கு அதிநவீன செயற்கை கால் நேற்று பொருத்தப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரோகினி தேவி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவரின் மகள் ஷாலினி 3 வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி ஷாலினி இடது காலின் முட்டிக்கு கீழ் பகுதியை இழந்தார். அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து, குழந்தையின் மூட்டுக்கு கீழ் பகுதி நீக்கப்பட்டு, சென்னை கே.கே.நகர் மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் துறையில் எக்ஸ்டோ ஸ்கேலிடல் ப்ராஸ்தெஸிஸ் பொருத்தப்பட்டது. குழந்தையின் வளர்ச்சி காரணமாக அந்த செயற்கை காலை மாற்றி தரும்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், குழந்தை ஷாலினிக்கு ரூ.66 ஆயிரம் மதிப்புள்ள ‘அதி நவீன செயற்கை கால்’ முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்த செயற்கை கால் பாதமும் அசைக்கக்கூடியவகையில் உள்ளது. தற்போது அந்த சிறுமி நடனபோட்டியில் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், ஏஆர்எம்ஓ கீதா, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை மருத்துவர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். புதிதாக பொருத்தப்பட்ட செயற்கை கால் மூலம் சிறுமி, விளையாடவும், பள்ளி செல்லவும், தனது இயல்பான வாழ்க்கையை வாழ உதவியாக இருக்கும் என சிறுமியின் பெற்றோர் அரசுக்கும், மருத்துவர்களுக்கு நன்றி கூறினர்.

Related Stories: