ரூ.730 கோடியில் மேம்பாலத்துடன் 4 வழி சாலையாக விரிவாக்க பணிகள் தீவிரம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை சித்தூர்- வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை

வேலூர், பிப்.25: சித்தூர்- வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.730 கோடியில் மேம்பாலத்துடன் சாலை விரிவாக்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை- பெங்களுரூ நகரங்களை இணைக்கும் வகையில் 347 கி.மீ நீளம் கொண்ட என்எச்48 என்ற தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாக பெங்களூரு சென்றடையும் வகையில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை- பெங்களுரூ நகரங்களுக்கு விரைவாக செல்வதற்கான எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், சென்னை- பெங்களுருக்கு 3 மணி நேரத்திற்குள் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

தற்ேபாது சென்னை- பெங்களூரு இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (என்எச்40) வேலூர் மாவட்டம் வழியாக வாலாஜாபேட்டை- சித்தூர் சாலை இரு வழி சாலையாக உள்ளது. இதனால் சித்தூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் இச்சாலையில் செல்வதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர். வாலாஜாபேட்டையில் இருந்து சித்தூர் வரை உள்ள இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சித்தூர்- வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையை இருவழி சாலையில் இருந்து நான்கு வழி சாலையாக, மேம்பாலத்துடன் அமைக்க ரூ.730 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: சித்தூர்- வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகனங்களின் தேவைக்கு ஏற்ப தற்போதுள்ள இருவழி சாலை, 4 வழி சாலையாகவும், மேம்பாலத்துடன் அமைக்க ரூ.730 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த முத்தரசிகுப்பம் பகுதியில் தொடங்கி, வாலாஜாபேட்டை வரை சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்துடன் கூடிய நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தில் 3 இடங்களில் மட்டுமே வாகனங்கள் இறங்கி, ஏறும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கான மேம்பாலத்திற்கு குறுக்கே 23 இடங்களில் சப்வே அமைக்கப்பட உள்ளது. இச்சாலை அமைக்கும் பணிகளை வரும் 2027ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முடிக்க வேண்டும் என ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சித்தூர்- வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: