வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது வேலூர் இபிஎப் மண்டலத்தில் 10 இடங்களில்

வேலூர், பிப்.25: வைப்பு நிதி உங்கள் அருகில் ‘நிதி ஆப்கே நிகத் 2.0’ எனப்படும் வைப்பு நிதி உங்கள் அருகில் சிறப்பு முகாம்கள் வேலூர் இபிஎப் மண்டலத்தில் வரும் 27ம் தேதி 10 இடங்களில் நடைபெறுகிறது. இம்முகாம்களில் தொழிலாளர்கள், தொழிற்நிறுவனங்கள் அல்லது முதலாளிகள் கலந்து கொள்ளலாம் என்று வருங்கால வைப்பு நிதி நிறுவன ஆணையர் மயங்க் ராஜ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதி ஆப்கே நிகத் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் வரும் 27ம் தேதி இம்முகாம்கள் வேலூர் இபிஎப் மண்டலத்தில் 10 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.

இம்முகாமில், இபிஎப் மற்றும் எம்பி சட்டம் 1952ன் சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள், ெபாறுப்புகளை விளக்குதல், முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு, விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை களைதல், ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், யுஏன், கேஒய்சி இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷன் தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி என்ற முகவரியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, போளூர் சாலை, செங்கத்திலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதராஜீலு மேல்நிலைப்பள்ளி, ஆற்காட்டிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் டான் போஸ்கோ பள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கூகுள் படிவத்தில் தங்கள் விவரங்களை நிரப்புவதன் மூலம் திட்டத்தில் தங்களை பதிவு செய்யலாம் என வருங்கால வைப்பு நிதி ஆணையர் மயங்க் ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: