கொடைக்கானல் : கொடைக்கானலில் சாக்லெட் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமாயின.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருபவர்கள்.
இங்கு வருபவர்கள் கொடைக்கானலின் பிரசித்தி பெற்ற ஹோம்மேட் சாக்லெட்கள், தைலம் மற்றும் இங்கு விளையக்கூடிய காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். சுற்றுலாப் பயணிகளுக்காக, கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலை கல்லறைமேடு பகுதியில் மட்டும் சாக்லெட், காய்கறிகள், பழங்கள், தைலம் வியாபாரம் செய்யக்கூடிய 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்குள்ள ஒரு சாக்லெட் கடையில் மராமத்துப் பணிகள் நேற்று நடந்து வந்தது. அச்சமயம் வெல்டிங் வேலை செய்த போது திடீரென தீ பரவி அருகிலுள்ள ஒரு கடையில் பற்றியது. தொடர்ந்து பரவிய தீயால் அடுத்தடுத்து 4 கடைகளிலும் தீப்பற்றி குபுகுபுவென எரிய துவங்கியது. தகவலறிந்ததும் கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் 5 கடைகளும் முழுமையாக எரிந்து பல லட்சம் மதிப்புள்ள சாக்லெட், தைலம் உள்ளிட்ட பொருட்கள் நாசமாகின என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்தால் கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுக்குள் வராத தீ காரணம் என்ன?
தீ விபத்து நடந்த கடைகளில் தலை வலி, கால் வலிக்கான தைலங்களும் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை பற்றி எரிந்ததன் காரணமாகவே தீயின் தாக்கம் அதிகளவில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே தீயை அணைப்பதற்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
