புதுடெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த்தம் எனப்படும் பிரதமர் அலுவலகம், முக்கிய அமைச்சகங்களின் அலுவலகமாக செயல்படவிருக்கும் கர்தவ்யா பவன் 1 மற்றும் கர்தவ்யா பவன் 2 ஆகிய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். டெல்லியில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள் சென்ட்ரல் விஸ்டா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் துறை அலுவலகங்களை ஒரே இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடமை பாதை அருகே, ஒன்றிய தலைமை செயலகத்தை கர்தவ்யா பவன் என்ற பெயரில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் நவீன வடிவில் கட்டப்பட்டுள்ளன. சென்ட்ரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சேவா தீர்த்தம் என்ற பெயரில் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் பிரதமர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. நிதி, பாதுகாப்பு, சுகாதாரம்,குடும்ப நலன், கல்வி மற்றும் முக்கிய அமைச்சகங்களுக்காக கர்தவ்யா பவன் 1 மற்றும் கர்தவ்யா பவன் 2 ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கும் விழாவில் சேவா தீர்த்தத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேவா தீர்த்தம், கர்தவ்ய பவன் 1 மற்றும் கர்தவ்யா பவன் 2 இந்தியாவின் நிர்வாக நிர்வாக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்லாகும். இது நவீன மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
* பழைய பிரதமர் அலுவலகத்தில் கடைசி அமைச்சரவை கூட்டம்
பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கரால் பிரிட்டிஷ் அரசின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இம்பீரியல் வளாகத்தில் தான் தற்போது பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் அதன் புதிய வளாகமான சேவா தீர்த்தத்திற்கு மாற்றப்பட உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பழைய பிரதமர் அலுவலக கட்டிடத்தில் கடைசி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதன் பின்னர் சேவா தீர்த்தத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்படும். 1921ம் ஆண்டு முதல் அதிகார மையமாக இருந்த வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை அனைத்து அரசுத் துறைகளும் காலி செய்வதால் இந்த நடவடிக்கையானது ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கும். இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை காலனித்துவ நீக்கம் செய்வதற்கான அரசின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் உள்ளது.
