தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் 9 மாநிலங்களில் பாதிப்பு: பல இடங்களில் ரயில் மறியல்

புதுடெல்லி: தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக 9 மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய 4 தொழிலாளர் சட்டம், இந்தியா, அமெரிக்கா வர்த்த ஒப்பந்தம் ஆகியவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த ேபாராட்டத்தில் ஒடிசா, கேரளா, கோவா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது.

மற்ற மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் பல மாநிலங்களில் வாயில் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. சில இடங்களில், தொழிலாளர்கள் தாமதமாக வேலைக்கு வந்தனர். 30 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்தது.

ஒடிசாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. கேரளாவிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்து முடங்கியது. பஞ்சாபின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது. கோவாவிலும் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. மத்தியப் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரியும் 25,000 க்கும் மேற்பட்ட சிவில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரிக்க ேநற்று ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றனர். ஆனால் திரிபுரா, மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்த அழைப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. குஜராத்தில் ஊழியர்கள் போராட்டம் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர்கள் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: