புதுடெல்லி: பிரான்சிடமிருந்து ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட பிற ராணுவ கொள்முதல் திட்டங்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் 96 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், இந்திய விமானப்படைக்கான மல்டி ரோல் ரபேல் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் சூடோ சாட்டிலைட் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதல் ரபேல் விமானங்கள் வாங்குவது இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனையும், பாதுகாப்பு திறனையும் மேலும் வலுப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் பலம் 42 படைப்பிரிவுகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிரிவிலும் 18 முதல் 22 விமானங்கள் இருக்கும். ஆனால் தற்போது 29 முதல் 31 படைப்பிரிவுகளே செயல்பாட்டில் உள்ளன. இதிலும் மிக்-21, ஜாகுவார் போன்ற விமானங்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலில், அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கான இந்த ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கி உள்ளது.
ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் சேவையில் உள்ளன. கடற்படைக்காக 26 ரபேல்-எம் வகை விமானங்கள் வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து தற்போது 114 ரபேல் போர் விமானங்கள் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாக இருக்கும். இதில் 18 விமானங்களை பறக்கும் நிலையில் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும்.
இதில், 50 சதவீதத்திற்கு அதிகமான பொருட்கள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானங்களுக்கான கொள்முதல் செலவை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்றாலும் அது ரூ.2.90 லட்சம் கோடி முதல் ரூ.3.25 லட்சம் கோடியாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இனி பாதுகாப்பு அமைச்சகம் டசால்ட் நிறுவனத்துடன் விமானத்தின் கொள்முதல் விலை, அதன் பாதுகாப்பு அம்சங்கள், ஆயுத விவரங்களை இறுதி செய்யும்.
மேலும், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் முடிப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர இருக்கும் நிலையில், 114 ரபேல் விமானம் வாங்குவதற்கான ஒப்புதலை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* அமெரிக்காவிடமிருந்து ரூ.28 ஆயிரம் கோடியில் 6 பி-8ஐ கடல்சார் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களை வாங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல்களின் சவால்கள் அதிகரிக்கும் நிலையில் பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
* ஏற்கனவே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் இதே போல 114 போர் விமானங்கள் வாங்க ஆரம்ப கட்ட டெண்டரை வெளியிட்டது. பின்னர் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
* ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரபேல் விமானங்கள் வாங்குவது சமீபத்திய ஆண்டுகளில் நடக்கும் உலகின் மிகப்பெரிய ராணுவ கொள்முதல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
