புதுடெல்லி: யுபிஎஸ்சியின் நிர்வாக குழப்பத்தால் புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுக்கு பிறகு பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாராணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,’சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு தான் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டது. டிஜிபி நியமனம் செய்யும் விவகாரத்தில் சட்ட விதிகள் அனைத்தையும் மாநில அரசு பின்பற்றி உள்ளது. எங்களுக்கு ஒரு நல்ல மற்றும் சிறந்த அனுபவம் மிக்க அதிகாரி தேவை என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும் யு.பி.எஸ்.சி சட்ட விதிகளில் இருந்து நாங்கல் முரண்படுகிறோம். எங்கள் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசை பொருத்தமட்டில் புதிய டி.ஜி.பி தேர்வுக்காக சில பெயர்களை பரிந்துரைத்திருந்தோம். ஆனால் யு.பி.எஸ்.சி நிர்வாகம் தான் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தான் எங்களது முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. அதாவது தேர்வு குழுவில் டி.ஜி.பி இல்லாத நிலையில் கூடுதல் உள்துறை செயலாளரை அந்த தேர்வு குழுவில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதனை யு.பி.எஸ்.சி ஏற்றுக்கொள்ளவில்லை. டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மண்டல சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை, புலனாய்வு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு மற்றும் புலனாய்வு ஆராய்ச்சி பகுப்பாய்வு பிரிவு (அதாவது ரா, சிபிஐ, அமலாக்கத்துறை என்.ஐ.ஏ) ஆகிய நான்கு குறிப்பிட்ட பிரிவுகளில் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது அனுபவம் வாய்ந்தவராக இருந்திருக்க வேண்டும் என்று யு.பி.எஸ்.சி விதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் பல திறமையான அதிகாரிகள் பெயர்கள் விடுபடுகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளவர், அதிகப்படியான கிரிமினல் வழக்குகளை கொண்ட ஒரு யூடியூபர் ஆவார். எனவே அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள்,’ தமிழ்நாட்டில் நிரந்தர டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான புதிய முன்மொழிவை தமிழ்நாடு அரசு இன்றைய (நேற்று) தினத்தில் இருந்து ஒரு வாரத்தில் கொடுக்க வேண்டும்.
இதையடுத்து அடுத்த இரண்டு வாரத்தில் யு.பி.எஸ்.சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பொறுப்பு டி.ஜிபி என்பது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. மேலும் டி.ஜி.பி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி இல்லாத பட்சத்தில் டி.ஜி.பி அந்தஸ்த்தில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அதிகாரியை இடம்பெறலாம். மேலும் டிஜிபி நியமனம் தொடர்பான இந்த ஆணையை தெலுங்கானா உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* யு.பி.எஸ்.சி விதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சிறப்பு விலக்கு
தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது,’ புதிய டிபிஜி நியமனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சூழலை தற்போது கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மண்டல சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நான்கில், ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது அனுபவம் வாய்ந்தவராக இருந்திருக்க வேண்டும் என்ற யு.பி.எஸ்.சி நிர்வாக விதியை தமிழ்நாட்டுக்கு மட்டும் தளர்த்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
