தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் ராகுல்காந்தி எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும்: பாஜ எம்பி நிஷிகாந்த் நோட்டீஸ்; மக்களவையில் கடும் அமளி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜ எம்பி மக்களவையில் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். மக்களவையில் நேற்று பா.ஜ எம்பி நிஷிகாந்த் துபே பூஜ்ய நேரத்தில் ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறிக்க நோட்டீஸ் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும் நிஷிகாந்த் துபே, ராகுல் தேசவிரோத சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
பாஜ எம்பியின் கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவைத் தலைவர் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜ எம்பி நிஷிகாந்த் துபே,’ மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சோரோஸ் அறக்கட்டளை, அமெரிக்க நிதியுதவி போர்டு (US AID) அறக்கட்டளையுடன் கைகோர்த்து வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் கூட்டுசேர்வது குறித்து நோட்டீசில் குறிப்பிட்டுள்ளேன். சிறப்புரிமை தீர்மான அறிவிப்பு இல்லை. நான் ஒரு முக்கியமான தீர்மான அறிவிப்பை வழங்கி இருக்கிறேன். அதில் அவர் தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார். மேலும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் எவ்வாறு கூட்டுச் சேர்ந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளேன். ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார். இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் ராகுல் காந்திக்கு பிரச்னை ஏற்படக்கூடும்.

ராகுல் காந்தி ஒரு ரவுடி: நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங், ‘‘இந்த நாட்டில் உங்களை விட பெரிய பொய்யர் மற்றும் ரவுடி யாரும் இல்லை என்பதை ராகுல்காந்தியிடம் நான் கூற விரும்புகிறேன்” என்றார்.

* தூக்கிலிட விரும்பினாலும் நாங்கள் தயார்
ராகுலுக்கு எதிராக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே நோட்டீஸ் கொடுத்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘எந்தவொரு தீர்மானம் குறித்தும் நாங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் எங்களை தூக்கிலிடுவதற்கு விரும்பினாலும் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Related Stories: