கர்நாடகாவில் சொத்து குவிப்பு 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு: கோடிக்கணக்கில் பணம், தங்கம், வெள்ளி பறிமுதல்

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைக் குவித்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநில 4 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்க கண்காணிப்பாளர் எச்.எம்.ஜனார்த்தனுக்குச் சொந்தமான பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் உள்ள 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.20 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.2.57 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஜனார்த்தனின் நண்பர் சுஜய் ஷெட்டி வசிக்கும் இடத்தில் ரூ.1.70 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெஸ்காமின் சிவில் துறையில் பணிபுரியும் பொறியாளர் ஆர்.எச்.அர்ஜுனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட தாவணகெரேவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். தார்வாட் நிலப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரும், நில அளவைத் துறை மேற்பார்வையாளருமான சோமலிங்கப்பாவின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. பெலகாவி மாவட்டம் முர்கோட்டில் உள்ள அவரது வீடு உட்பட 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: