திருப்பூர்: தமிழ்நாடு அமைதி பூங்கா, இங்கு கடவுளின் பெயரிலோ, மதத்தின் பெயரிலோ கலவரங்களை உருவாக்க கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.திருப்பூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கூட்டணி குறித்து அமமுக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் கூட்டணியை தலைமை தாங்கக்கூடிய சில கட்சிகள் எங்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஒரு சிலரின் சுயநலம், சுய லாபம், பதவி ஆசைக்காக அம்மாவின் தொண்டர்களை பிரித்து விட்டார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு தூங்கிக் கொண்டிருப்பவர்களும் தூங்குவது போல் நடிப்பவர்களும் எம்ஜிஆரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்சியை வழிநடத்த முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும்போது, கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களை அழைத்து சுமூக முடிவெடுக்க பேசுவதை மிரட்டுவதாகவோ, தலையீடு செய்வதாகவோ நான் கருதவில்லை. தமிழ்நாடு அமைதி பூங்கா. இங்கு கடவுளின் பெயரிலோ மதத்தின் பெயரிலோ அரசியல் படுத்தி கலவரங்களாக உருவாக்காமல், அரசியல் கட்சியினர், அமைப்புகள் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு மக்களின் விருப்பம். தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் முன் வைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
