சென்னை: தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் சென்னையில் சுற்றுச்சூழல் குறித்த 2 நாள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அர்விந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: கண்ணுக்கு தெரியாத கடவுள்களை கும்பிடும் நாம் கண்ணுக்கு தெரியும் இயற்கையை அழித்து வருகிறோம். திருப்பூரில் மலைபோல் கழிவுகள் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நமக்கு எதுவும் தெரிவதில்லை. அங்குள்ள சாயப்பட்டறைகளில் வேலை பார்க்கும் பலர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். உண்மையான வளர்ச்சி என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் இயற்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் முக்கிய பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முனைந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் என்பது கலாச்சாரத்தோடு இணைந்ததாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க சட்ட பாதுகாப்பு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கடல்சார் ஆய்வுகள் மற்றும் கடல்சார் மேலாண்மை தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.
