திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திய ரூ. 2.3 கோடி மதிப்புள்ள உயர் ரக கலப்பின கஞ்சா கடத்திய சென்னை ஆசாமியை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
தாய்லாந்து, வியட்நாம், ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு கொக்கைன், எம்டிஎம்ஏ, உயர் ரக கலப்பின கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் பெருமளவு கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்க சுங்கத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
ஆனாலும் போதைப் பொருள் கடத்தல் தொடர்கிறது. இந்தநிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக கொச்சி வந்த ஒரு தனியார் விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கொச்சி வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடந்தது.
இதில் சென்னையை சேர்ந்த பினு பெபின் (25) என்ற பயணி கொண்டு வந்திருந்த பேக்கில் பரிசோதனை செய்தபோது அதில் 4 பாக்கெட்டுகளில் மொத்தம் 2.3 கிலோ உயர் ரக கலப்பின கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் 574 கிராம் கஞ்சா இருந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ 2.3 கோடி என்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பினு பெபினை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
