தங்கும் அறைகளில் ‘திடீர்’ சோதனை உயர் ரக போதைப்பொருட்கள் பதுக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேர் கைது

*ஒரே நாளில் மாவட்ட போலீசார் அதிரடி

மதுக்கரை : கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் அறைகளில் நேற்று நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், ஆயில் மற்றும் உயர் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாணவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட போலீசார் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வப்போது கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கும் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாவட்ட எஸ்பி.,கார்த்திகேயன் உத்தரவில், 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 300 போலீசார் காலை 5 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

க.கா.சாவடி, செட்டிபாளையம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அதிகமாக தங்கியிருக்கும் 120 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிரடி சோதனை நடந்தது. இதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறைகளில் 10.35 கிராம் மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள், 4 கிலோ கஞ்சா, 2 கிலோ கஞ்சா சாக்லெட், 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், உரிய ஆவணங்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத 22 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மொத்தம் 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து கோவை எஸ்பி., கார்த்திகேயன் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்ட போலீஸ் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்கள் அறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் 300 போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் உயர் ரக போதைப்பொருள், கஞ்சா,ஒரு கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிந்தடிக் டிரக் வகையை சேர்ந்த மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள் உடல் மற்றும் மன நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

கைதான சிலர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறை வாடகைக்கு கொடுக்கும் போது உரிமையாளர்கள் முழுமையாக விசாரித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிலர் பிற இடங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு கோவையில் கல்லூரி மாணவர்களின் அறையில் பதுங்குகின்றனர். உரிமையாளர்கள் அடிக்கடி வீட்டிற்கு சென்று சோதனை செய்ய வேண்டும்.கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு மட்டும் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளில் இது தான் அதிகம். மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: