ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.09 கோடி பணமோசடி: வாலிபர் கைது

திண்டுக்கல்: ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.09 கோடி மோசடி செய்த போடி வாலிபரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், போடி, எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (25). ஏலக்காய் மொத்த வியாபாரி. இவர், தனது நண்பருடன் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதி வியாபாரிகளிடம் ஏலக்காய்களை மொத்தமாக வாங்கி மறுவிற்பனை செய்து வருகிறார். போடியை சேர்ந்த சத்யபிரியன் (25), தாண்டிக்குடியில் ஏலக்காய் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஏலக்காய் சப்ளை செய்வதாக முத்துப்பாண்டியிடம் கூறி, 2024 முதல் 2025 வரை ரூ.10 கோடியே 33 லட்சம் வரை வாங்கியுள்ளார். இதில் ரூ.7 கோடியே 24 லட்சத்துக்கு மட்டும் ஏலக்காய் சப்ளை செய்துள்ளார். பாக்கியுள்ள தொகைக்கு ஏலக்காய் சப்ளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஏமாற்றமடைந்த முத்துப்பாண்டி பாக்கி தொகை ரூ.3 கோடியே 9 லட்சத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், சத்யபிரியன் பணத்தை கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பாண்டி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்பி பிரதீப் உத்தரவிட்டார். இதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சத்யபிரியன், அவரது மனைவி அபி, தந்தை கமலக்கண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு சத்யபிரியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: