ஒன்றிய அமைச்சர் பெயரை கூறி ரூ.73 லட்சம் மோசடி

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த 2019ல் சேலத்தை சேர்ந்த நண்பர் மோகன் மூலம், சேலத்தை சேர்ந்த பாலாஜி, சென்னையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் ரிசர்வ் வங்கி மூலம் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு திட்டம் செயல்பட்டு வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறினர். அதனை உறுதிபடுத்தும் விதமாக பல்வேறு ஆவணங்களை கொடுத்தனர்.

குறிப்பாக ஒன்றிய அமைச்சர் ஒருவரது பெயரில் ரூ.9,102 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடு நிதியை இந்திய வங்கி கணக்கிற்கு மாற்றியதற்கான ஒப்புதல் ஆணை, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரின் புகைப்படத்துடன் கூடிய உறுதிமொழி கடிதம், ரிசர்வ் வங்கி பெயரில் அடையாள அட்டை, நுழைவு சீட்டு ஆகியவற்றை காட்டி உறுதிப்படுத்தினர். இதனை நம்பிய நானும் எனது நண்பர்களும் 2019 முதல் 2021 வரை பல்வேறு தவணைகளில் ரூ.63 லட்சம் அவர்களிடம் கொடுத்தோம். அதேபோல் பாலாஜியின் அலுவலகத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்களை வாங்கி கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை திருப்பி தரவில்லை. என்னிடம் மோசடி செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: