திருத்தணி: ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த, திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதனை ஆந்திராவிற்கு கடத்திச் சென்று பாலீஷ் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, ஆர்கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி ரயில் மற்றும் பேருந்துகளில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி ரயில் நிலையத்தில் அரக்கோணம் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ரயில் நடைமேடை மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 90 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் ஆந்திராவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்த பதுக்கி வைத்திருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 25 கிலோ எடை கொண்ட சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
