கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

நாகை,ஜன.13: கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் அட்சயா(28). இவர் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தார். திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்து கொள்ள முயற்சி செய்தார். இதை பார்த்தவுடன் அங்கிருந்த பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த பெண் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் பிச்சப்பட்டி பகுதியை சேர்ந்த எனது கணவர் மாரிச்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதை தட்டி கேட்ட என்னை தாக்கினார். இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஜாமீனில் வெளியே வந்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>