கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் கோணம் பொறியியல் கல்லூரியில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில், ஜன.12:  கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அதிகாரிகள் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதி பொதுத்தேர்தல் முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டை பழுது பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்குசாவடிகள் தயார் செய்யப்பட்டு அவற்றில் உள்ள அடிப்படை வசதிகள் செய்ய வேண்டியது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 தொகுதிகளுக்கும் சட்டபேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தருவாயில், அதற்கேற்ப வாக்கு எண்ணிக்கை மையத்தை தயார்படுத்த விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த தேர்தல்களில் நாகர்கோவில் கோணம் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் மட்டும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குபதிவுக்கு பின்னர் இருப்பு வைக்கப்பட்டு அங்கேயே ஆறு அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்தாண்டு 2 தேர்தல்கள் நடைபெறும் போது வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளவும், வாக்குபதிவு இயந்திரங்களை வைத்து பாதுகாக்கவும் கூடுதல் இடங்கள் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே கோணம் அரசு பொறியியல் கல்லூரி கட்டிடங்களையும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு தயார் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நேற்று அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, தேர்தல் பிரிவு தாசில்தார் சேகர், மற்றும் தாசில்தார்கள், வருவாய்துறை அதிகாரிகள், சர்வேயர்கள் உள்ளிட்டோர் கோணம் அரசு பாலிடெக்னிக் கட்டிடம், அரசு பொறியியல் கல்லூரி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருப்பு வைக்கவும், வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கவும் வசதியாக உள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories:

>