நெல்லை மாநகராட்சி கமிஷனர் நடத்திய கூட்டத்தில் பரபரப்பு மாடியில் இருந்து குதிக்க முயன்ற பிஎல்ஓ: எஸ்ஐஆர் பணிக்கு பாஜ பிரமுகர் நெருக்கடி என புகார்

 

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்று பதிவேற்றம் செய்வது தொடர்பாக பாளையங்கோட்டை தொகுதி பிஎல்ஓக்களுடன் தொகுதி தேர்தல் அலுவலரும், நெல்லை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் மோனிகா ராணா நேற்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தினார். இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 270 பிஎல்ஓக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பிஎல்ஓ ஒருவரிடம் போனில் பேசிய பாளை. சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். நேருஜி கலையரங்கத்திற்கு வெளியே நின்றிருந்த அவர் தன்னை சந்திக்க வருமாறு வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து அந்த பாஜ பிரமுகர் தனக்கு மன அழுத்தம் கொடுப்பதாகக் கூறி கூட்டத்தில் இருந்து வெளியே ஓடி வந்த பிஎல்ஓ, மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அவரது பின்னால் ஓடி வந்த சில பிஎல்ஓக்கள் கையை பிடித்து இழுத்து அவரை காப்பாற்றினர். இதையடுத்து அவர், பாஜ பிரமுகர் எஸ்ஐஆர் பணிகளுக்காக தொடர்ந்து தனக்கு மன அழுத்தம் கொடுப்பதாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் மோனிகா ராணாவிடம் கண்ணீர் விட்டபடி கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்தார்.

Related Stories: