ரூ.252 கோடி போதைப்பொருள் வழக்கு; பேஷன் ஷோ-வுக்கு வருவது போல் போலீஸ் ஸ்டேஷன் வந்த ‘யூடியூபர்’ : சட்டை விலை ரூ.1.6 லட்சம்

மும்பை: போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடை அணிந்து வந்த சமூக வலைதள பிரபலத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கைப்பற்றப்பட்ட ரூ.252 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமான ஓர்ரி அவத்ரமணி என்பவரிடம் விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதற்காக அவர் நேற்று மும்பை போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். பொதுவாகக் குற்ற வழக்குகளில் விசாரணைக்குச் செல்பவர்கள் எளிமையான ஆடைகளையே அணிந்து செல்வார்கள். ஆனால், முதல்முறையாக விசாரணைக்குச் சென்ற ஓர்ரி, அங்கு நடந்துகொண்ட விதம் போலீசாரையே திகைக்க வைத்தது.

விசாரணைக்கு அவர் அணிந்து வந்த இத்தாலிய நிறுவனத்தின் சட்டை மட்டும் சுமார் ரூ.1.6 லட்சம் ஆகும். மேலும் அவரது கண்ணாடி, காலணி என அனைத்தும் சேர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘விசாரணைக்கு வரச்சொன்ன போலீசார் எனக்கு எந்த ஆடை கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நான் எதையும் மறைக்காத நேர்மையானவன் என்பதைக் குறிக்கும் வகையிலேயே, உள்ளே அணிந்திருப்பது வெளியே தெரியும் வகையிலான இந்த ஆடையைத் தேர்வு செய்தேன்’ என்று விநோத விளக்கம் அளித்துள்ளார். போலீஸ் விசாரணைக்குச் செல்லும்போது கூட இவர் பேஷன் ஷோ போல ஆடை அணிந்து வந்தது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Related Stories: