முதல் ஓடிஐயில் இன்று அடிபட்ட புலியாய் இந்தியா அட்டகாச ஃபார்மில் தெ.ஆ: கோஹ்லி, ரோகித் அதிரடி அரங்கேறுமா?

ராஞ்சி: இந்தியா – தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரின் முதல் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. அந்த அணி ஏற்கனவே ஆடிய 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது.

இந்நிலையில் இந்த அணிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி, ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான முன்னாள் கேப்டன்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆடவுள்ளனர். இந்த தொடரில் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகிய இருவர் வெளிப்படுத்தும் ஆட்டத்திறனை பொறுத்தே, 2027ல் நடக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் அவர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது முடிவாகும்.

இன்றைய போட்டியில் நட்சத்திர பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் காயங்கள் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இதனால் மிடில் ஆர்டரிலும், டாப் ஆர்டரிலும் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கும் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், தென் ஆப்ரிக்கா அணி, டெஸ்ட் தொடரில் இந்தியாவை வென்ற தெம்புடன் இன்றைய போட்டியில் களம் காண்கிறது. அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே இன்றைய போட்டியில் இடம்பெறா விட்டாலும், நம்பிக்கையுடன் அவர்கள் போட்டியை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இன்றைய போட்டியில் களமாடும் வீரர்கள்
இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, திலக் வர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.

தென் ஆப்ரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), அய்டன் மார்க்ரம், டெவால்ட் புரூவிஸ், நன்ரே பர்கர், குவின்டன் டிகாக், மார்கோ யான்சன், டோனி டி ஜோர்ஸி, ரூபின் ஹெர்மான், ஒட்னெல் பார்ட்மான், கோர்பின் பாஷ், மேத்யூ பிரீட்ஸ்கி, கேஷவ் மகராஜ், லுங்கி நிகிடி, ரையான் ரிக்கெல்டன், பிரிநீலன் சுப்ராயன்.

Related Stories: