ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த சமயத்தில் செங்கோட்டையனின் கறைபடிந்த பக்கங்கள்: ஊழல் வழக்கு தண்டனை முதல் வாச்சாத்தி வன்கொடுமை வரை: வலை தளங்களில் மீண்டும் உலா

கோவை: ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தபோது செங்கோட்டையன் செய்த ஊழல்கள் மற்றும் அடாவடிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், ஜெயலலிதா இருந்தவரை புனித ஆட்சி நடந்ததாகவும், மீண்டும் புனிதமான, நேர்மையான ஆட்சி அமைய விஜய் முதலமைச்சராக உயிர்மூச்சு இருக்கும்வரை பாடுபடுவேன் எனவும் கூறினார்.

இந்நிலையில், ஜெயலலிதா அமைச்சரவையில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது செய்த அடாவடிகளும், ஊழல்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. 1977ம் ஆண்டு தேர்தலில் சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக செங்கோட்டையன் சட்டப்பேரவைக்கு தேர்வானார். பின்னர் 1980, 1984, 1989, 1991 தேர்தல்களில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

அதிமுக இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த செங்கோட்டையனுக்கு, 1991ல் ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்து துறை மற்றும் வனத்துறை அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வழங்கினார்.  போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில் அத்துறையில் ரூ.2.6 கோடி ஊழல் செய்ததாக செங்கோட்டையன் மீது 1996ல் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கடந்த 2000ம் ஆண்டில் செங்கோட்டையன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.05 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக, 2001 சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையனால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து செங்கோட்டையன் மேல்முறையீடு செய்த நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் 2002ல் தண்டனை மற்றும் வழக்கில் இருந்து தப்பித்தார்.

இதேபோல ஜெயலலிதாவிற்கு பரிசு பொருட்கள் வழங்கிய வழக்கிலும், செங்கோட்டையன் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நடந்த மிக மோசமான வன்கொடுமை சம்பவமாக நினைவுகூரப்படும் வாச்சாத்தி வன்கொடுமை நடந்தபோது, வனத்துறை அமைச்சராக இருந்தது செங்கோட்டையன் தான்.

1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி என்ற மலையடிவார பழங்குடியின கிராமத்திற்குள் வீரப்பனுடன் தொடர்புடைய சந்தன மரக்கடத்தல்காரர்களை பிடிப்பதாக கூறி வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அக்கிராமத்தில் இருந்த எல்லா வீடுகளும் சூறையாடப்பட்டதோடு, பழங்குடி மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையும் அரங்கேறியது.

இத்தகைய கொடூரத்தை அரங்கியேற்றிய பிறகும், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே அதிமுக அரசு வழக்குப்பதிந்து கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியது. தமிழக வரலாற்றில் கரும்புள்ளி சம்பவமாக பார்க்கப்படும் இந்த சம்பவத்தை, அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பழங்குடிகளையே ஈவு ஈரக்கமின்றி குற்றவாளியாக சித்தரித்தார்.

பழங்குடிகள் தான் அதிகாரிகளை மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், கடத்தல்காரர்களை பிடித்ததை தவிர வேறு எந்த ஒரு சிறு தவறும் நடக்கவில்லை என அபாண்டமான பொய்யை செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அள்ளி வீசினார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டின் காரணமாக இந்த வன்கொடுமை சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்ததோடு, தொடர் சட்டப் போராட்டத்தால் வாச்சாத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட 215 பேர் குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பு செங்கோட்டையனின் முகத்திரையை கிளித்து எறிந்ததாக பாதிக்கப்பட்ட மக்களால் பேசப்பட்டது.  பின்னர், 2006, 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ந்து செங்கோட்டையன் வெற்றி பெற்றாலும், அரசியலில் கோலோச்ச முடியாமல் சரிவை சந்தித்தார்.

2011ல் மீண்டும் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தாலும், ஒரே ஆண்டிற்குள் வேளாண்மை துறை, தகவல் தொழில்நுட்ப துறை, வருவாய்த்துறை என ஜெயலலிதா அடுத்தடுத்து பொறுப்புகளை கொடுத்தும், மாற்றியும் அலைக்கழித்தார். ஒருகட்டத்தில் செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஜெயலலிதாவிடம் புகாரளிக்க, கோபமடைந்த ஜெயலலிதா அமைச்சர் மற்றும் கட்சி பதவிகளை பறித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா மறையும்வரை செங்கோட்டையனால் கட்சியிலும், ஆட்சியிலும் தலையெடுக்க முடியவேயில்லை. 2017ல் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 வரை செங்கோட்டையன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பள்ளிக்கல்வி துறை சீரழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அரசியல் அடைக்கலம் தேடி தவெகவில் இணைந்துள்ளார். இத்தகைய செங்கோட்டையன் நேர்மையான, புனிதமான ஆட்சி அமைய பாடுபடுவேன் எனக்கூறுவது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும், இது எல்லாம் தவெக தலைவர் விஜய்க்கோ அல்லது அக்கட்சி தொண்டர்களுக்கோ தெரியுமா? என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசித்தள்ளி வருகின்றனர்.

* பெட்டிக்கடைக்காரரிடம் தோற்ற செங்கோட்டையன்
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் முடிசூடா அரசியல்வாதியாக இருக்கும் செங்கோட்டையன், 1996 சட்டமன்ற தேர்தலில் பெட்டிக்கடை நடத்தி வந்த சாதாரண திமுக தொண்டரான வெங்கிடு என்பவரிடம் தோல்வியடைந்தார். அதற்கு முன்பு 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும், பணத்தை வாரியிறைத்த போதும், அவர் மீதிருந்த ஊழல் மற்றும் அடாவடி புகார்களால் வெற்றி பெற முடியவில்லை.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் 2001 தேர்தலில் போட்டியிட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனால், 1996 முதல் 2006 வரை 10 ஆண்டுகள் பதவி இல்லாமல் இருந்த செங்கோட்டையன், அதன்பிறகும் அரசியல் கோலோச்ச முடியாமல் வீழ்ச்சியை சந்தித்து வருகிறார்.

* தமிழ்நாட்டில் நடந்த மிக மோசமான வன்கொடுமை சம்பவமாக நினைவுகூரப்படும் வாச்சாத்தி வன்கொடுமை நடந்தபோது, வனத்துறை அமைச்சராக இருந்தது செங்கோட்டையன் தான். இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பழங்குடிகளையே ஈவு ஈரக்கமின்றி குற்றவாளியாக சித்தரித்தார்.

* செங்கோட்டையனுக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி தவெகவினரும் திரண்டு வருகின்றனர். இதனால், செங்கோட்டையனுக்கு தவெக சார்பில் 2 வடஇந்திய பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பவுன்சர்கள் பாதுகாப்புடன் அவர் இருப்பது, பேசு பொருளாக மாறி உள்ளது.

Related Stories: