தக்காளி விலை கிடு கிடு உயர்வு

*பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு

ஊட்டி : தக்காளி விலை உயர்ந்து, கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதேபோல், சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால், ஊட்டிக்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது.

இதன் காரணமாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஊட்டி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தக்காளி விலை கடந்த மூன்று தினங்களாக உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், நேற்று ஊட்டி உழவர் சந்தையில் கிலோ ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் கிலோ ஒன்று ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், தக்காளி விலையை கேட்டு பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அதேபோல், சிறிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ ஒன்று ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறிய வெங்காயமும் கிலோ ஒன்று ரூ.70 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: நீலகிரிக்கு தினமும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ வரை தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு வரத்து குறைந்துள்ளது.

இதனால், தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தக்காளி வரத்து குறைந்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். சமவெளிப் பகுதிகளில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால், தற்போது மைசூரில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தக்காளி விலை அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: