கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மீது ஆட்சேபனைகள்: உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் தகவல்

சென்னை: கரூரில் நடிகர் விஜய்யின் தவெக நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தங்கள் கட்சிகள் சார்பில் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் முன்பு தங்கள் கட்சியினரை அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் தனி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். கூட்டங்களுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்கும் போது அதற்கு உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது, ரோடு ஷோக்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல் உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? ஏற்கப்பட்டதா? என்று முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது எனக் கூறி விசாரணையை நாளை தொடரும் என்று தெரிவித்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: