பிரம்மாண்ட முகப்புடன் மேடை அமைப்பு

ஈரோடு, நவ. 26: ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவையொட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரம்மாண்ட முகப்புடன் மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, மேடை மற்றும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய வகையிலான பந்தல் அமைக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளது. இதில், மின் விளக்குகள், பேன்கள், ஒலி, ஒளி ஏற்பாடு போன்றவை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளான பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

8 மாவட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிப்பு
முதல்வர் வருகையை முன்னிட்டு ஈரோடு மட்டும் அல்லாது கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டத்தை சேர்ந்த எஸ்பி.கள் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதில், முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்கள், முதல்வர் வந்து செல்லும் வழித்தடங்கள், முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் இடங்கள், திமுக நிகழ்ச்சி, திருமண விழா நடக்கும் மண்டபம் என அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுதவிர அரசு விழா நடக்கும் சோலார் புதிய பேருந்து நிலையத்தில் மட்டும் தமிழக காவல் துறை தலைமை அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன் ஆகியோர் தலைமையில் 8 மாவட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 450 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விழா, நடக்கும் மேடை, பந்தல் ஆகிய இடங்களில் மோப்ப நாய் மூலமும் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் மூலமும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முதல்வர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் தீ போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: