யாருடன் கூட்டணி? டிச. 30ல் அறிவிப்பு: ராமதாஸ் உறுதி

திண்டிவனம்: யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆத்தூரில் டிசம்பரில் நடக்கும் பொதுக்குழுவில் கலந்துபேசி அறிவிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் தந்தை, மகன் மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த 2 அணிகளுமே போட்டி கூட்டங்களை நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது.

இதில், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் புதா.அருள்மொழி, செயல் தலைவர் காந்தி, பொதுசெயலாளர் முரளி சங்கர், இணை பொதுச் செயலாளர் எம்எல்ஏ அருள், இளைஞர் சங்க தலைவர் தமிழ்க்குமரன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், ‘10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் 12ம்தேதி தமிழகம் முழுவதும் மாட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடக்க உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து துண்டறிக்கைகள் அச்சிட்டு வீடுதோறும் வழங்க வேண்டும்.

சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எஸ்ஐஆர் பணிகளில் கவனமாக இருந்து விண்ணப்பங்களை மக்களிடம் இருந்து பெற்று தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். எதிர்கோஷ்டியினர் வம்புக்கு இழுத்தால் பதிலடி கொடுக்காமல் சட்ட ரீதியாக அணுக வேண்டும். கண்டிப்பாக கூட்டணி அமைத்துதான் நாம் தேர்தலை எதிர்நோக்க உள்ளோம். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தேர்தலின்போது நமது நிலைப்பாட்டை அறிவிப்போம்’ என தெரிவித்தார்.

பின்னர் ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘ கூட்டணி குறித்து கருத்து கேட்க டிசம்பர் 30ல் சேலம் ஆத்தூர் தலைவாசலில் பொதுக்குழு கூடி ஆலோசிப்போம். மண்டபம் முன்பதிவு செய்துள்ளோம். அங்கு கூட்டணி பற்றி முடிவெடுப்போம். வரும் தேர்தலில் இளைஞர் சங்கத் தலைவர் தமிழ்குமரன், சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் போட்டியிடுவார்கள்’ இவ்வாறு அவர் கூறினார்.

* ராமதாஸ் – அன்புமணி இணைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஜி.கே.மணி
ஜி.கே.மணி கூறுகையில், ‘ராமதாசும், அன்புமணியும் ஒன்றிணைவதற்காக எம்எல்ஏ பதவியை நான் ராஜினாமா செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இவர்கள் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்கிற பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. அன்புமணி அணியை சேர்ந்தவர்கள் என்னை தீய சக்தி என கூறுவது வருத்தமாக இருக்கிறது. நானும், அருளும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் என்றும் ராமதாசுடன் மட்டுமே பயணிப்போம். அவரை விட எம்எல்ஏ பதவி எங்களுக்கு பெரியது இல்லை. ராமதாசுடன் சேர்ந்து அன்புமணி பயணிப்பதற்கு ஜி.கே.மணி தான் தடையாக இருக்கிறான் என்பது திட்டமிட்ட சதி, பொய்’ என்றார்

* ஐயா பாமக கட்சியை ஆரம்பித்தது யார்? அருள் புதுதகவல்
எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘ராமதாசும், அன்புமணியும் இணைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார் என ஜிகே.மணி கூறிய கருத்தில் நான் மாறுபடுகிறேன். தந்தை, கட்சியின் நிறுவனர், தலைவர் அழைத்தே வராதவர் நாங்கள் பதவி விலகுவதால் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல முடிவை தருவார்கள். ஆமைபோல் ராமதாஸ் பணியை ஆரம்பித்தார், தற்போது வெற்றிபெற போகிறோம். முயல்போல் ஆரம்பித்தவர்கள் தூங்கி வழிகிறார்கள். ஐயா பாமக என புதிய கட்சி ஆரம்பித்தது அன்புமணி தரப்பினர். பொதுக்குழு வழியாக கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பர்’ என்றார்.

Related Stories: