விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்க 9 நாட்களே உள்ள நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எஸ்ஐஆர் குறித்து எடப்பாடி ஆலோசனை: காணொலிக்காட்சி மூலம் நடந்தது

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைய இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தபடி காணொலிகாட்சி மூலம் 82 மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் சுமார் 6.20 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 சதவீத விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்காளர் நிலை அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

எஸ்ஐஆர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் உதவி செய்து வருகிறார்கள். அதேநேரம், அதிமுகவினரோ, பொதுமக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு திமுகவினரை குற்றம் சொல்வதில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்களே அதிருப்தி அடைந்துள்ளனர். எஸ்ஐஆர் பற்றி எதுவுமே தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்களே புலம்பும் நிலையும் உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்தபடி காணொலிகாட்சி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 82 அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிவடையும், கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் எஸ்ஐஆர் பணிகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு, பொதுமக்களை ஒருங்கிணைத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தகுதியுடைய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதற்கான பணிகளை கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதிமுக பூத் கமிட்டி அமைத்து இந்த பணியில் ஈடுபட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திடீரென மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது அதிமுக நிர்வாகிகளே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். காரணம், எஸ்ஐஆர் பணியில் திமுக கட்சி ஆரம்ப முதலே தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் அதிமுக இதில் பின்தங்கி இருந்ததுடன், தேர்தல் ஆணையத்துக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இப்போது கடைசி நேரத்தில் கட்சி தலைமை எஸ்ஐஆர் பணியில் பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று கூறி இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: