ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசுதா அறிமுக கூட்டம் ஆரணியில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வேலு, நகர செயலாளர் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வேட்பாளரை அறிமுகம் செய்து அதிமுக நிர்வாகிகள் பேசி கொண்டிருந்தனர். அப்போது, தற்போதைய ஆரணி எம்எல்ஏவான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தனது ஆதரவாளர்களுடன் வந்து, வேட்பாளருக்கு சால்வை அணிவித்து பேசினார். எம்எல்ஏவின் ஆதரவாளரான மணிமாறன், போட்டோ எடுக்க முயன்றார்.
இதற்கு கூட்டத்தில் இருந்த மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக பேசி தள்ளிவிட்டு தாக்க முயன்றுள்ளார். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்த வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். அப்போது, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் ஆகியோர் திடீரென எழுந்து, ‘வேட்பாளர் அறிவித்து இத்தனை நாட்களாக சிட்டிங் எம்எல்ஏ எங்கு போயிருந்தார்? இப்பதான் வேட்பாளரை தெரிகிறதா, தவெகவில் இணைய போவதாக யூடியூப், டிவி, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நிறுத்திட்டு வாங்க, கட்சிக்கு மனசாட்சியுடன் செயல்படுங்கள்’ என ஆவேசமாக கூறினர்.
அதற்கு, எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன், ‘நான் உங்களிடம் பேசவில்லை. வேட்பாளரிடம் பேசுகிறேன். என்னை பற்றி வேட்பாளருக்கு தெரியும். அதனால், நீங்கள் உங்கள் வேலைைய செய்யுங்கள்’ என்றார். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால் தனியாக போய் பேசிக்கொள். இங்கிருந்து கிளம்புங்கள்’ என்றனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பையும் வேட்பாளர் ஜெயசுதா சமாதானம் செய்தார். அப்போது, எம்எல்ஏ எஸ்.ராமச்சந்திரன், அங்கிருந்தவரிடம் இருந்த மைக்கை பறித்து, ‘நான் இரட்டை இலை சின்னத்தில் 4 முறை நின்று ஜெயித்துள்ளேன். வேறு கட்சிக்கு சென்றதில்லை. எனது வாழ்கை முழுவதும் கட்சிக்காக உண்மையாக தொடர்ந்து பணியாற்றுவேன்.
கட்சி தலைமை அறிவித்துள்ள வேட்பாளரை வெற்றிபெற முழு மூச்சுடன் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என பேசியபடி கண்ணீர் விட்டு கதறினார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘வேட்பாளர் அறிவித்த நாளில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்’ என மருத்துவ பரிசோதனை அறிக்கையை பாருங்கள் என்று காண்பித்தார். மேலும் எனது உடல்நிலை சரியானதும் வந்து கட்சி பணிகளை மேற்கொள்கிறேன் என தெரிவித்துவிட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
