பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல்; அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன் பியூஷ் கோயல் சமரச பேச்சு: முரண்டு பிடிப்பதால் பரபரப்பு

சென்னை:தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தொடர் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையுடன், பியூஷ் கோயல் சமரசர பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர் முரண்டு பிடித்து வருவதால் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் குழப்பம் நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை என்றும், பாஜக வெல்வதற்கு கடினமாக இருக்கும் தொகுதிகளை குறி வைத்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அதிமுக மீது பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பல்லடம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் சூலூர் தொகுதிகளை குறிவைத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை பாஜகவுக்கு ஒதுக்கவில்லை. இதேபோல் பாஜக பலமாக இருப்பதாக நினைக்கும் சென்னை, கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜக தொண்டர்கள் அப்செட்டாகி உள்ளனர். பாஜகவினர் அதிருப்தி பற்றி பாஜக மேலிட தலைவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில் பாஜக தொண்டர்கள் தங்களின் அதிருப்தியை வலைதளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். மேலும் அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இதனால் அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பாஜக – அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போன்று அதிமுக ஒதுக்கியுள்ள பெரும்பாலான தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லையெனவும் அவர் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனை தலைமையிடம் அவர் வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு சீட் வேண்டாம் எனவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவையும் கட்சி தலைமையிடம் அண்ணாமலை தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அதிமுக சார்பில் 167 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அண்ணாமலையை கட்சி தலைமை கண்டிப்பாக தேர்தலில் போட்டிட வலியுறுத்தியுள்ளது. இதனால் தனக்கான தொகுதி கிடைத்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறி வருகிறார். இதனால் அண்ணாமலையை களமிறக்கும் வகையில் ஒரு சில தொகுதிகளை மாற்றி தரும்படி பாஜக சார்பில் அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதிமுக தலைமையோ மறுத்துவிட்டது. இதனால் கடுப்பான அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளளனர்.

இதற்கிடையே, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களம் இறங்கும் படி பாஜ தலைமை கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாக வானதி சீனிவாசன் துண்டு போட்டு இடம் பிடித்து வைத்துள்ளார். கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலைக்கு விட்டு கொடுக்க முடியாது என்று கூறிவருகிறார். இது அண்ணாமலைக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மொத்தத்தில் பாஜ தலைமை மீது கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருப்பதால் தேர்தல் பணிகளையும் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வில் முட்டல் மோதல் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை, கோவை வந்த பிரதமரை வரவேற்க வரவில்லை. இதுபற்றி கேள்வி எழுப்பியபோது, லிஸ்ட்டில் அண்ணாமலை பெயர் இருந்தது. அவர் தான் வரவில்லை என்று வானதி சீனிவாசன் கூறினார். நயினார் நாகேந்திரனோ, அவர் வெளியூர் சென்று விட்டார் என்று கூறினார். இவர்கள் இருவரும் சரியான தகவலை சொல்லவில்லை என்பது தெளிவாகியது. இதன் மூலம் வேண்டும் என்றே அண்ணாமலை புறக்கணித்தது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அண்ணாமலையோ தனது ஆதரவாளர்களிடம், பிரதமரை வரவேற்கும் லிஸ்ட்டில் எனது பெயரே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் ஒருவர் இருந்தது என்கிறார், மற்றொருவர் வெளியூர் சென்றுவிட்டார் என்கிறார். நான் கோவையில் தான் இருக்கிறேன். உண்மையை வெளியில் சொன்னால் என்னவாகும் என்பதை பாஜ தலைமை உணர வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையை, மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கும் படி அண்ணாமலையை வற்புறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரணத்தால் தான் பாஜகவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் குழப்பம் நீடித்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் முடிய இன்னும் 5 நாள் இருக்கும் நிலையில் அண்ணாமலை என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பரபரப்பு பாஜகவில் நீடித்து வருகிறது.இந்தநிலையில் மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று பாஜ மேலிடம் கூறி வருகிறது. அவர் இதுவரை சம்மதிக்காவிட்டாலும் அவரை சமாதானப்படுத்தி, தேர்தலில் நிற்க வைக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: