பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை புறக்கணித்த பாஜவினர்: முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை

பரமக்குடி: பரமக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில் பாஜ முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசகையில், ‘‘பாஜவுக்கு அதிமுக அடிமை என்று சொல்கிறார்கள். ஆனால் எப்போதும் யாருக்கும் அடிமையாக அதிமுக இல்லை. அம்மாவும் இல்லை, நானும் இல்லை. எனது கட்சியினர் யாரும் யாருக்கும் அடிமையில்லை’’ என்றார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிப்பதற்காக கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு வந்தவர்கள் மாலை 6 மணி முதல் 9 மணி வரை காத்திருந்தனர். நீண்ட நேரமானதால் அவர்கள் ஊருக்கு கிளம்ப தொடங்கினர். அப்போது அவர்களை அதிமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிப்பதற்காக 2 மணி நேரத்திற்கு முன்பாகவே சாலையை மறைத்து அதிமுகவினர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பேருந்து நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் 6 மணி முதலே நிறுத்தப்பட்டன. இதனால் கிராமத்திற்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி நடந்தும், டூவீலரிலும் சென்றனர். மேலும் நெசவாளர்களும், வியாபாரிகளும் அதிமுகமுள்ள பரமக்குடி தொகுதியில், அவர்கள் குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்காததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

புறக்கணித்த பாஜவினர்: பரமக்குடியில் நடந்த பிரசாரத்தில், பாஜவை சேர்ந்த முக்கிய மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும் பிரசாரத்தில் பாஜ கொடியும் இல்லாமல் இருந்தது அதிமுக கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. என்டிஏ கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதிக்கு பாஜ வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டும் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்த சம்பவம் பாஜ மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: