எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வைகோ வழக்கு

புதுடெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள்’ கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், மதிமுக தரப்பிலும் பொதுச் செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை தலைமை நீதிபதி அமர்வு ஒத்தி வைத்தது.

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் தொடர்ந்த வழக்குகளோடு இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதனுடன் இணைத்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, ‘கேரளா மாநில எஸ்ஐஆர் விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நாளை நடைபெற இருக்கிறது. கேரளா விவகாரம் வேறு, தமிழக விவகாரம் வேறு என்பதால் மதிமுக தொடர்ந்த வழக்கை வரும் 2ம் தேதி விசாரணைக்கு எடுப்போம் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: