வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி நகராட்சி அலுவலகம் முன்பு பாமகவினர் முற்றுகை போராட்டம்

திருவண்ணாமலை, ஜன.8: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பாமக சார்பில் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்ேகாரி, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, விஏஓ அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம், பிடிஓ அலுவலகம் முற்றுகை போராட்டங்கள் ஏற்கனவே நடந்தது. அதன்தொடர்ச்சியாக, அனைத்து நகராட்சி அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டம் நேற்று மாநிலம் முழுவதும் பாமக சார்பில் நடத்தப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், முன்னாள் எம்எல்ஏ எதிரொலிமணியன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.காளிதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கை மனுவை நகராட்சி அலுவலகத்தில் அளித்தனர். இதேப்போல் ஆரணி நகராட்சி அலுவலகத்தை பாமக மாநில துணை பொதுச்செயாளர் வேலாயுதம் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையளாரிடம் மனு அளித்தனர். இதேப்போல் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்ககோரி மாவட்ட செயலாளர் க.சீனுவாசன் தலைமையில் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பாக பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதேப்போல் செய்யாறில், வன்னியர்களுக்கு 20 சதவிகித இடபங்கீடு கேட்டு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் அறவழிப் போராட்டத்திற்கு பாமக நகர செயலாளர் விநாயகம் தலைமைத் தாங்கி போராட்டம் நடத்தி மனு அளித்தனர். 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி, திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Related Stories: