3 நாள் பயணத்தை முடித்து டெல்லி திரும்பினார்; தென்னாப்ரிக்காவில் ஜி20 மாநாடு நிலையான வளர்ச்சியை உருவாக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: 3 நாள் பயணமாக ஜோகன்னஸ்பர்க்கிற்கு சென்று விட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். அப்போது, ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா-பிரேசில்-தென்னாப்ரிக்கா தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அந்நாட்டு அதிபர் சிறில் ராமபோசாவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

இந்நிலையில் தென்னாப்ரிக்கா பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று புதுடெல்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வெற்றிகரமான ஜோகன்னஸ்பர்க் ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலக தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். ஜி20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென்னாப்பிரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

Related Stories: