பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்பு சட்டங்களும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது: கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்பு சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): தற்போதுள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. பாஜ ஆட்சி என்பது கார்ப்பரேட்களுக்கு ஆதரவான ஆட்சியே தவிர, உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவான ஆட்சி அல்ல என்பதை தான் தொகுப்புச் சட்ட அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

இந்த சட்ட தொகுப்பை பொறுத்தவரை தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் காரண, காரியமில்லாமல் வேலையிலிருந்து நீக்குவதற்கு இச்சட்டங்களில் வாய்ப்பு நிறைய இருக்கிறது.
தொழிற்சங்கங்களின் வேலை நேரத்தை 9 முதல் 12 மணி நேரமாகவும், கடைகள் மற்றும் நிறுவனங்களின் வேலை நேரத்தை 9 மணி முதல் 10 மணி நேரமாகவும் சட்டத்தொகுப்பு அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமைகள் இதில் பறிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் நினைத்த நேரத்தில் உற்பத்தியை நிறுத்துவதற்கும், பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் இந்த சட்டத் தொகுப்பு பெரும் உதவியாக இருக்கிறது. மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): ஒன்றிய அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்த 4 தொகுப்பு சட்டங்களை தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அமலாக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சட்டங்களை திடீரென நேற்று முதல் அமல்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதோ தொழிலாளர் நலன்களை காப்பதற்காக கொண்டு வருவது போன்ற ஆரவார முழக்கத்துடன் சட்டங்களை அமலாக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள், உண்மையில் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. தொழிலாளர்களுக்கு விரோதமான இந்த சட்டங்களை, கார்ப்பரேட் அழுத்தங்களுக்கு அடி பணிந்து தன்னிச்சையாக ஒன்றிய அரசு திடீரென செயலுக்கு கொண்டு வந்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும்.

பொன்குமார் (தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சித் தலைவர்): தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நடைமுறைப்படுத்தாமல் மோடி அரசு வைத்திருந்த சட்டங்களை, தற்போது பணம் மற்றும் வாக்கு திருட்டு மூலம் பீகாரில் பெற்ற வெற்றி கொடுத்த தைரியத்தால் அந்த சட்டங்களை ஒன்றிய அரசு நேற்று நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது ஆண்டாண்டு காலமாக தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகளை பறிக்கவும், முதலாளிகளுக்கு ஆதரவான நிலையை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் என்பதால் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சுமார் 7000 கோடி வைப்பு நிதியுடன் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் கலைக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒரே வாரியமாக்கப்படும் அபாயம் உள்ளது. இது முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கு விரோதமான, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்ட தொகுப்புகளாகும் என்பதால் இது நடைமுறைப்படுத்துவதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: