தவுடு மூடைகளுக்கு இடையில் பதுக்கி லாரியில் கடத்திய 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: நாகர்கோவில் அருகே அதிகாரிகள் மடக்கினர்

நாகர்கோவில், ஜன.7: லாரியில் தவுடு மூடைகளுக்கு இடையில் பதுக்கி, கேரளாவுக்கு கடத்திய 18 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் ரேஷனில் கூடுதலாக இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட அரிசி தற்போது அதிகளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி மாவட்டம் வழியாக லாரிகள், டெம்போக்களிலும், ரயில்களிலும் அதிகளவில் அரிசி மூடைகள் கடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக லாரியில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக,  மாவட்ட வழங்கல் அலுவலர்  சொர்ணராஜூக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அவரது தலைமையில் வருவாய்த்துறை பறக்கும் படை தனி தாசில்தார் பாபு ரமேஷ், துணை தாசில்தார் அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், அலுவலக உதவியாளர் உசைன், பணியாளர்கள் டேவிட், இம்மானுவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் வடசேரி முதல் திட்டுவிளை வரையிலான பாலமோர் ரோட்டில் நேற்று முன் தினம் இரவு முதல் ேராந்து பணியில் இருந்தனர்.

 நேற்று அதிகாலை 4 மணியளவில் திட்டுவிளை சந்திப்பில் பறக்கும்படையினர் நின்று கொண்டு இருந்த போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அதிகாரிகள் ஜீப்பில் நிற்பதை பார்த்த லாரி டிரைவர், சிறிது தூரத்துக்கு முன்னால் லாரியை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி தப்பினார். இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது தவுடு மூடைகளுக்கு மத்தியில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. தொடர்ந்து நடந்த சோதனையில் சுமார் 18 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

அந்த லாரியில் வெளி மாவட்ட பதிவு எண் இருந்தது. கைப்பற்றப்பட்ட அரிசி மூடைகளை, கோணத்தில் உள்ள அரசு உணவு கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வாகனத்தை, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்தனர். பதிவு எண் மூலம் அந்த லாரியின் உரிமையாளர் யார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அவற்றை, கேரளாவுக்கு ெகாண்டு சென்றுள்ளனர் என அதிகாரிகள் கூறினர்.

சோதனை

சாவடிகளை கடப்பது எப்படி?

ரேஷன் அரிசி, மணல்  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடத்தலை தடுக்க, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் உள்ளன. ஒவ்ெவாரு மாவட்ட எல்லையிலும் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் கூட, ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடி அமைந்துள்ளது. ஆனால் இந்த சோதனை சாவடிகளை எல்லாம் கடந்து மிகவும் எளிதில் கடத்தல் வாகனங்கள் கேரளாவுக்கு செல்கின்றன. சோதனை சாவடிகளில் இதை கண்காணிக்காமல் விடுவது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: