அடங்கினார் ஆயுஷ் அரையிறுதியில் சென்: ஆஸி ஓபன் பேட்மின்டன்

சிட்னி: ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் லக்சயா சென், சக இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி, அரை இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒரு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இப்போட்டியின் முதல் செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் மோதியதால் இழுபறி காணப்பட்டது. இருப்பினும் கடைசி கட்டத்தில் சாதுரியமாக செயல்பட்ட சென், 23-21 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட்டில் சென் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 21-11 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றிய சென், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அரை இறுதிக்கு முன்னேறினார்.

* சாத்விக்-சிராக் இணை காலிறுதியில் தோல்வி
ஆஸி ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்பியன், முகம்மது ஷொஹிபுல் ஃபிக்ரி இணையுடன் மோதியது. முதல் செட்டில் இந்திய வீரர்கள் சளைக்காமல் போராடியபோதும் அந்த செட்டை, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேஷிய வீரர்கள் வசப்படுத்தினர். அடுத்த செட்டில் சிறப்பாக ஆடிய இந்தோனேஷிய வீரர்கள் 21-15 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி, 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Related Stories: