ஆம்பூர்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜை தொடங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டை பகுதியை சேர்ந்த 6 சிறுவர்கள் உட்பட 36 பேர் மாலை அணிந்து சபரிமலைக்கு தனி பஸ்சில் சென்றனர். இதனை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்த மணி என்பவர் ஓட்டினார். சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு அவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் டான்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பக்தர்கள் சிலர், டீ குடிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் டிரைவர் பஸ்சை தேசிய நெடுஞ்சாலையோரமாக நிறுத்தியுள்ளார். பின்னர் பஸ்சில் இருந்த 4 பேர் சாலையின் எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேன் வந்து, அவர்கள் மீது மோதியதில் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டை பகுதியை சேர்ந்த கங்காதரன்(37), சூர்யா(22) ஆகியோர் இறந்தனர். நரசிம்மன்(38), ஹரி(19) ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
