70 ஆண்டுகளாக இந்தி திரையுலகில் வலம் வந்த மூத்த நடிகை காமினி கவுஷல் மரணம்: திரைப்பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

 

மும்பை: ‘நீச்சா நகர்’ என்ற தனது முதல் படத்திலேயே கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய விருதை வென்று, இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த பழம்பெரும் இந்தி நடிகை காமினி கவுஷல் (98), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மும்பையில் நேற்று இரவு காலமானார். திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களுக்கு நாயகியாக நடித்து 1940 மற்றும் 1950ம் ஆண்டுகளில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த இவர், பின்னர் குணச்சித்திர வேடங்களில் தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவரது மறைவு, இந்தித் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஷாகித் கபூர், கரீனா கபூர், கியாரா அத்வானி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

காமினி கவுஷலின் மறைவையொட்டி, அவருடன் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘70 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில், வசீகரிக்கும் நடிப்பால் லட்சக்கணக்கானோரை மெய்சிலிர்க்க வைத்த பன்முகத் திறமை வாய்ந்த காமினி கவுஷலுக்கு எங்களது அஞ்சலியைச் செலுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உமா காஷ்யப் என்ற இயற்பெயர் கொண்ட காமினி கவுஷலுக்கு ஷ்ரவன், விதுர், ராகுல் சூட் என மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: