திஸ்பூர்: அசாம் சென்ற பிரதமர் மோடி, திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பெண்களுடன் இணைந்து தேயிலை பறித்தார். அரசு விழா மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, இன்று அசாம் சென்றுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவும் நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அசாமில் நடைபெறும் இரு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள மோடி, திப்ருகர் மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு இன்று காலை சென்றுள்ளார். அங்கு பெண் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலைப் பறித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ஒவ்வொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் குடும்பத்தின் முயற்சிகளை நினைத்து பெருமைக் கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அசாமின் பெருமையை உயர்த்தியுள்ளன என கூறினார்.
